3581. அழுந்திய சிந்தை
     அரக்கி, அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து,
     எதிர் நின்றாள்;
'புழுங்கும் என் நோவொடு
     புல்லுவென்; அன்றி,
விழுங்குவெனோ' என
     விம்மல் உழந்தாள்.

    அழுந்திய சிந்தை அரக்கி - இலக்குவன் மீது (ஆழமாக) அழுந்திய
(அன்பு கொண்ட) மனத்தை உடைய அரக்கியாகிய அயோமுகி; அலக்கண்
எழுந்து உயர் காதலின் -
துன்பம் மிக எழுவதற்குக் காரணமான
மிகுதியான ஆசையோடு; எதிர் வந்து நின்றாள் - (இலக்குவனுக்கு) எதிரே
வந்து நின்று; 'புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி - மனம்
(மாறுபட்டு) அழிவதற்குக் காரணமான ஆசையாகிய நோயினால்,
(அவ்விலக்குவனைத்) தழுவுவேனேயன்றி; விழுங்குவெனோ - (அவனைக்)
கொன்று தின்பேனோ (தின்ன மாட்டேன்); என விம்மல் உழந்தாள் -
என்று ஏக்கம் (மிகக்) கொண்டு வருந்தினாள்.

     இலக்குவன் மீது காதல் கொண்ட அயோமுகி, நான் அவனைத்
தழுவுவேனேயன்றிக் கொன்று தின்ன மாட்டேன்' என்றாள் என்க.
அலக்கண் - துன்பம். புழுங்குதல் - எண்ணி மனம் அழிதல். நின்றாள் -
முற்றெச்சம். புல்லுவென் - தன்மை ஒருமை வினைமுற்று. விழுங்குவனோ -
ஓகாரம் எதிர்மறை.                                            41