3582.'இரந்தனென் எய்திய
     போது, இசையாது
கரந்தனனேல், நனி கொண்டு
     கடந்து, என்
முரஞ்சினில் மேவி
     முயங்குவென்' என்று,
விரைந்து எதிர் வந்தனள்,
     தீயினும் வெய்யாள்!.

    தீயினும் வெய்யாள் - தீயினைக் காட்டிலும் கொடியவள் ஆகிய
அயோமுகி; இரந்தனென் எய்திய போது - (நான் இவனை) வேண்டி
நெருங்கும் போது; இசையாது நனிகரந்தனனேல் - (என் விருப்பத்துக்கு)
இசையாமல் முழுதும் மறுத்து விடுவானாகில்; கொண்டு கடந்து -
(அவனை) எடுத்துக் கொண்டு கடந்து சென்று; என் முரஞ்சினில் மேவி -
எனது குகைக்குக் கொண்டு சென்று; முயங்குவென் என்று - (அவனை)
வலியத் தழுவுவேன் என்று சொல்லி; எதிர் விரைந்து வந்தனள் -
(இலக்குவனுக்கு) எதிராக விரைந்து வந்தாள்.

     என் ஆசைக்கு இணங்கா விட்டால் நான் அவனை வலியத் தூக்கிச்
சென்று என் குகையில் வைத்து வலியத் தழுவுவேன்' என்று அயோமுகி
எண்ணினாள். முரஞ்சு - பாறை, இங்கு மலை முழைஞ்சாகிய பாறையைச்
சுட்டியது. ஆகு பெயர். இரந்தனன் - முற்றெச்சம்.                  42