அயோமுகியின் தன்மை

3583. உயிர்ப்பின் நெருப்பு
     உமிழ்கின்றனள்; ஒன்ற
எயிற்றின் மலைக் குலம்
     மென்று இனிது உண்ணும்
வயிற்றள்; வயக் கொடு
     மாசுணம் வீசு
கயிற்றின் அசைத்த
     முலை, குழி கண்ணாள்;

    உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் - (தன்) பெருமூச்சில்
நெருப்பை வெளிக் காலுபவளும்; எயிற்றின் - பற்களால்; ஒன்ற -
ஒன்றாக; மலைக்குலம் - யானைக் கூட்டங்களை; மென்று இனிது
உண்ணும் -
கடித்து மென்று இனிமையாக உண்ணுகின்ற; வயிற்றள் -
வயிற்றினை உடையவளும்; வயக்கொடு மாசுணம் வீசு கயிற்றின் -
வலிமையான கொடிய பாம்புகள் ஆகிய நீண்ட கயிற்றினால்; அசைத்த
முலை -
சேர்த்துக் கட்டிய முலைகளையும்; குழிகண்ணாள் - குழி
விழுந்த கண்களையும் உடையவளும் ........ (தொடர்ச்சி அடுத்த பாடலில்).

     அயோமுகியின் பெருமூச்சு, வயிறு, முலை, கண் ஆகியவை பற்றி
இப்பாடலில் கூறப்பட்டன.. மலை - யானை. மாசுணம் - பெரும் பாம்பு.
மலை - யானைக்கு உவமையாகு பெயர். மலைக்குலம் - இருபெயரொட்டுப்
பண்புத் தொகை. வய - வலியென்னும் பொருள் தரும் உரிச் சொல்.    43