3584. | பற்றிய கோள் அரி, யாளி, பணிக்கண் தெற்றிய பாத சிலம்பு சிலம்ப, இற்று உலகு, யாவையும் ஈறுறும் அந் நாள், முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள்; |
பற்றிய கோள் அரி - (தான் கைப்) பற்றிய வலிமையான சிங்கங்களையும்; யாளி - யாளிகளையும்; பணிக்கண் தெற்றிய - பாம்பாகிய கயிற்றில் (ஒன்றாகச்) சேர்த்துக் கட்டிய; பாத சிலம்பு சிலம்ப - காற்சிலம்பை ஒலிக்குமாறு தரித்தவளும்; யாவையும் - (உலகில் உள்ள) எல்லாப் பொருள்களும்; இற்று - அழிந்து; உலகு ஈறுறும் அந்நாள் - உலகம் முடிவு பெறுகிற பேரூழிக் காலத்தில்; முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள் - (வெப்பம்) மிகுந்த கதிரவன் போன்ற முகத்தினை உடையவளும்......... (தொடர்ச்சி அடுத்த பாடலில்). பாம்பாகிய கயிற்றில் சிங்கம், யாளி ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டிப் பாதச் சிலம்பாக அணிந்தவள். உலகம் அழியும் காலத்தில் மிக்க வெப்பத்துடன் சுடர் விடும் கதிரவன் போன்ற முகத்தினை உடையவள் என்று அயோமுகியை வருணித்தவாறு. கோளரி - சிங்கம், யாளி - யானையைப் போன்று துதிக்கையும் சிங்கத்தினைப் போன்று உடலமைப்பும் உடையதொரு வலிய விலங்கு. பணி - படத்தை உடையது எனப் பாம்புக்குக் காரணப் பெயர். தெற்றிய - சேர்த்துக் கட்டிய. கோள் - முதல் நிலை நீண்ட தொழிற் பெயர். அரியாளி - உம்மைத் தொகை. 44 |