3585. ஆழி வறக்க முகக்க அமைந்த
மூழை எனப் பொலி மொய் பில வாயாள்;
கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால்,
ஊழி நெருப்பின் உருத்தனை ஒப்பாள்;

    ஆழிவறக்க முகக்க அமைந்த - கடலும் வற்றும் படி முகப்பதற்காக
அமைக்கப்பட்ட; மூழை எனப் பொலி - அகப்பை என்னும்படி
விளங்குகின்ற; மொய் பில வாயாள் - வலிமையான குகை போன்ற வாயை
உடையவளும்; கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால் - தலைமயிர்
பக்கங்களில் விரிந்து விளங்கும் தன்மையால்; ஊழி நெருப்பின்
உருத்தனை ஒப்பாள் -
உலக ஊழிக் காலத்து நெருப்பின் வடிவம் தனை
ஒத்தவளும்...... (தொடர்ச்சி அடுத்த பாடலில்).

     அயோமுகியின் பெரிய வாய் கடலை முகந்து வறளச் செய்யும் பெரிய
அகப்பை போல் விளங்கியது. அவளது விரிந்த தலைமயிர் ஊழிக் காலத்து
நெருப்பை ஒத்து விளங்கியது என்றவாறு. ஆழி - கடல், மூழை - முகக்கும்
கருவியாகிய அகப்பை, இதற்கு முகவை எனப் பொருள் கூறி நீர் முகக்கும்
கருவியாகிய குடுவை என்பாருமுளர். கூழை - தலைமயிர். கொட்பு -
தன்மை. தலைமயிருக்கு ஊழித் தீயை உவமையாகக் கூறியதால் அம்மயிர்
சிவந்த நிறமுடையது என்பது பெறப்பட்டது.                        45