3586. | தடி தடவ, பல தலை தழுவ, தாள் நெடிது அடைய, குடர் கெழுமு நிணத்தாள்; அடி தடவ, பட அரவம் இசைக்கும் கடிதடம் உற்றவள்; உருமு கறிப்பாள்; |
தடி தடவ - அளவு கோலால் தடவி அளப்பதற்குரிய; தலை பல தழுவ - (அந்த) இடத்தைப் போன்ற பல இடங்களைத் (தன்) ஓரடியில் அளக்கும்படி; தாள் நெடிது அடைய - (தன்) பாதங்கள் நீண்ட தூரம்; அடி தடவ - அடி வைத்துச் செல்ல; குடர் கெழுமு நிணத்தாள் - (அதனால் தான் உண்டு செல்லுகிற) குடலொடு பொருந்திய கொழுப்பு எங்கும் சிதற; பட அரவம் இசைக்கும் - படம் எடுத்த பாம்பின் படத்தை ஒத்த; கடிதடம் உற்றவள் - அல்குல் பொருந்தியவளாகிய (அயோமுகி); உருமு கறிப்பாள் - இடியை ஒத்து பற்களைக் கடிப்பவளாயினாள்.... (தொடர்ச்சி அடுத்த பாடலில்). நீண்ட அடிவைத்து அயோமுகி வரும் வேகத்தால் அவள் உண்டு வந்த இறைச்சியும் கொழுப்பும் எங்கும் சிதறி விழுந்தன. பாம்பின் படத்தை ஒத்த அல்குலை உடைய அவள் இடிபோல் பற்களைக் கடித்தாள் என்க. தடி - அளவு கோல். இசைக்கும் - ஒக்கும். கடிதடம் - அரையிடம் (அல்லது) அல்குல். உருமு - இடி. கறித்தல் - பற்களைக் கடித்தல். குடர் - கடைப் போலி. 46 |