3587. | இவை இறை ஒப்பன என்ன, விழிப்பாள்; அவை குளிர, கடிது அழலும் எயிற்றாள்; குவை குலையக் கடல் குமுற உரைப்பாள்; நவை இல் புவித்திரு நாண நடப்பாள். | இவை - (அவளது) இக்கண்கள்; இறை ஒப்பன என்ன - சிவனின் கண்களை ஒப்பன என்று சொல்லுமாறு; விழிப்பாள் - (சினத்துடன்) விழித்துப் பார்ப்பவளும்; அவை குளிர - அக்கண்களில் இருந்து வெளிப்பட்ட சின நெருப்புக் குளிர்ந்து விட்டது என்று சொல்லும்படியாக; கடிது அழலும் எயிற்றாள் - மிகக் கொடுமையைக் காட்டும் பற்களை உடையவளும்; குவைகுலையக் - மலைகளும் தன் நிலை கெட்டு அழியும் படியும்; கடல் குமுற - கடல்கள் மோதிக் குமுறும் படியும்; உரைப்பாள் - கடுமையாகப் பேசுபவளும்; நவை இல் புவித்திரு நாண நடப்பாள் - குற்றம் இல்லாத பூமகளாகிய செல்வத் தேவி வெட்கம் அடையும்படி நடப்பவளும்....... (தொடர்ச்சி அடுத்த பாடலில்). சிவபிரானின் கண்களில் தீ வெளிப்படுதல் போல் விழித்து, அந் நெருப்பும் குளிர்ந்து விட்டது என்று எண்ணுமாறு பற்கடித்து வெப்பமெழுப்பி, மலை குலைய, கடல் அதிர முழங்கி, பூமகள் நாண அயோமுகி வந்தாள் என்க. இறை - சிவன், குவை - மலைக் கூட்டம், நவை - குற்றம். புவித்திரு - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. 47 |