3588. நீள் அரவச் சரி,
     தாழ் கை, நிரைத்தாள்;
ஆள் அரவப் புலி
     ஆரம் அணைத்தாள்;
யாளியினைப் பல
     தாலி இசைத்தாள்;
கோள் அரியைக் கொடு
     தாழ் குழை இட்டாள்;

    நீள் அரவச் சரி - நீண்ட பாம்புகளாகிய வளையலை; தாழ்கை
நிரைத்தாள் -
நீண்ட கையில் வரிசையாக அணிந்தவள்; அரவ ஆள் புலி
ஆரம் அணைத்தாள் -
உறுமுகிற ஆண்புலிகளைக் (கோத்து) ஆரமாக
அணிந்தவள்; பல யாளியினைத் தாலி இசைத்தாள் - பல யாளிகளைக்
(கோத்துத்) தாலியாகக் கட்டியவள்; கோள் அரியைக் கொடு தாழ் குழை
இட்டாள் -
கொள்ளும் (வலிய) சிங்கங்களைக் கொண்டு தாழ்ந்த
காதணியாக அணிந்தவள்.                                       48