அயோமுகியை இலக்குவன் கண்டு வினவல்

3589. நின்றனள், ஆசையின்
     நீர் கலுழும் கண்
குன்றி நிகர்ப்ப,
     குளிர்ப்ப விழிப்பாள்,
மின் திரிகின்ற
     எயிற்றின் விளக்கால்,
கன்று இருளில் திரி
     கோளரி கண்டான்.

    குன்றி நிகர்ப்ப - குன்றி மணியை ஒத்துள்ள; ஆசையின் நீர்
கலுழும் கண் -
காம நோயால் (சிவந்த) நீர் ஒழுகும் கண்களின் மூலம்;
குளிர்ப்ப விழிப்பாள் - குளிர்ச்சியாக நோக்குபவள் ஆகிய அயோமுகி;
நின்றனள் - நின்றாள்; கன்று இருளில் திரி கோளரி - செறிந்த இருட்டில்
திரிகின்ற சிங்கம் போன்ற இலக்குவன்; மின் திரிகின்ற எயிற்றின்
விளக்கால் -
ஒளி வீசுகின்ற அவள் பற்களின் ஒளியாகிய விளக்கினால்;
கண்டான் - (அந்த அயோமுகியைக்) கண்டான்.

     சிவந்த குன்றி நிகர்க்கும் கண்களால் காதல் கலந்த குளிர் பார்வை
பார்த்துக் கொண்டு நின்றாள். இருளில் வலிய சிங்கம் போல் திரிந்த
இலக்குவன், அவளது ஒளி வீசுகின்ற பற்களாகிய விளக்கின் ஒளியால்
அந்த அயோமுகியைக் கண்டான். முன்பாட்டில் வெப்பக் கனலே உருவான
அரக்கியைக் காட்டி, அந்த வெப்பக் கொடுமையே குளிர்வதாக இங்கே
காட்டுகிறார். இயல்பான வெம்மை காம வெறியால் குளிர்ப்ப விழிக்கச்
செய்துள்ள இரசவாதம் இலக்குவனுக்கு வாய்த்த சோதனை. மின் - ஒளி.
கன்று இருள் - செறிந்த இருள். விழிப்பாள் - முற்றெச்சம். எயிற்றின்
விளக்கு - உருவகம். கோளரி - உவமை ஆகுபெயர்.               49