3590. | 'பண்டையில் நாசி இழந்து பதைக்கும் திண் திறலாளொடு தாடகை சீராள்; கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர் ஒண்தொடி ஆம், இவள்' என்பது உணர்ந்தான். |
பண்டையில் - முன்பு; நாசி இழந்து பதைக்கும் - மூக்கை இழந்து வருந்தின; திண் திறலாளொடு - மிக்க வலிமை உடைய சூர்ப்பணகையோடு; தாடகை - தாடகை என்பவளையும்; சீராள் - (ஒத்த) தன்மை உடையவள்; கண்டகர் ஆய அரக்கர் - தீயவர்களாகிய அரக்கர்களின்; கணத்து ஓர் ஒண்தொடி ஆம் இவள் - கூட்டத்தில் தோன்றிய ஒரு பெண்ணாம் இவள்; என்பது உணர்ந்தான் - என்பதைப் (பார்த்தவுடன்) இலக்குவன் உணர்ந்து கொண்டான். சூர்ப்பணகை - இலக்குவனால் மூக்கு முதலிய உறுப்புகளை இழந்தவள். இதனை. ஊக்கித் தாங்கி, விண்படர்வென் என்று உருத்து எழுவாளை நூக்கி, நொய்தினில், 'வெய்து இழையேல்' என நுவலா மூக்கும் காதும், வெம் முரண் முலைக் கண்களும், முறையால் போக்கி, போக்கிய சினத் தொடும் புரிகுழல் விட்டான். (2825) என்ற பாடல் விளக்குகிறது. தாடகை, விசுவாமித்திரனின் எண்ணப்படி இராமனால் கொல்லப்பட்டவள். இதனைப் பால காண்டத்தில் வரும் 88 முதல் 92 வரையுள்ள பாடல்களைக் கொண்டு அறிக. கண்டகர் - வழிச் செல்வாரைத் தடுத்து முள்ளைப் போன்று வருத்தும் கொடியோர். திண் திறல் - ஒரு பொருட் பன்மொழி, ஒண் தொடி - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 50 |