3591.'பாவியர் ஆம் இவர்;
     பண்பு இலர்; நம்பால்
மேவிய காரணம் வேறு
     இலை' என்பான்;
'மா இயல் கானின் வயங்கு
     இருள் வந்தாய்!
யாவள் அடீ? உரைசெய்,
     கடிது' என்றான்.

    பண்பு இலர் - நற்பண்புகள் இல்லாதவரும்; பாவியர் ஆம் இவர் -
பாவியர்களும் ஆகிய இவர்கள்; நம்பால் - நம்மிடம்; மேவிய காரணம்
வேறு இலை -
வருவதற்கு உரிய காரணம் வேறு ஒன்றும் இல்லை;
என்பான் - என்று நினைத்தவனாகிய (இலக்குவன்); மா இயல் கானின் -
விலங்குகள் திரிகின்ற காட்டின்கண்; வயங்கு இருள் வந்தாய் - மிக்க
இருளில் வந்தவளாகிய (நீ); யாவள் அடீ - யாரடி; உரை செய்கடிது -
விடையை விரைவாகச் சொல்; என்றான் - என்று கேட்டான்.

     நற்குணமில்லாத கொடியவர்களாகிய அரக்கியர் நம்மிடம் வருவதற்கு
வேறு காரணம் இல்லை என்றது பாவம் செய்தலாகிய ஒரு காரணம்
உள்ளது எனக் கருதியதாகும். வந்தாய் - முன்னிலை ஒருமை
வினையாலணையும் பெயர்; 'வந்தவளே' என விளியாகவும் கொள்ளலாம்.  51