அயோமுகியின் காம வெறியும் இலக்குவன் மறுப்பும் 3592. | பேசினன்; அங்கு அவள் பேசுற நாணாள்; ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான், 'நேசம் இல், அன்பினளாயினும், நின்பால் ஆசையின் வந்த அயோமுகி' என்றாள். |
பேசினன் - (மேலே குறிப்பிட்டவாறு இலக்குவன்) பேசினான்; அங்கு- அப்பொழுது; ஊசல் உழன்று அழி சிந்தையளும் தான் அவள் - ஊசலாடி வருந்தி அழிகின்ற மனத்தை உடையவளாகிய அயோமுகியும் தான்; பேசுற நாணாள் - தன் ஆசையை ஆண்மகனிடம் தானே எடுத்துச் சொல்ல நாணமடையாதவளாய்; நேசம் இல் அன்பினளாயினும் - பழைய உறவு இல்லாத அன்பு உடையவள் ஆயினும்; நின்பால் - நின்னிடம்; ஆசையின் வந்த அயோமுகி - ஆசையால் வந்த அயோமுகி என்ற பெயர் உடையவள்; என்றாள் - என்று கூறினாள். ஊசல் உழன்று அழி சிந்தையள் இலக்குவன் தன்னை ஏற்பானோ மாட்டானோ என்று தடுமாறும் உள்ளம் கொண்டவள். பேசுற நாணாள் - தாமுறு காமத் தன்மை தாங்களே ஆடவனிடம் உரைக்க நாணாதவள். மூன்றாவது அடிக்கு வேறு பாடங்களும் உள; எனினும், நாம் கொண்ட பாடம் உட்பட எதற்கும் முற்றும் பொருந்துறப் பொருள் கொள்ள இயலவில்லை. ஏடேழுதியோர் பிழையோ, பொருள் கொள்ள நம்பால் உள்ள குறையோ - தெரியவில்லை. தான் - அசையாகவும் கொள்ளலாம். 52 |