3594. ஆறிய சிந்தையள்
     அஃது உரைசெய்ய,
சீறிய கோளரி
     கண்கள் சிவந்தான்;
'மாறு இல வார் கணை, இவ்
     உரை வாயின்
கூறிடின், நின் உடல்
     கூறிடும்' என்றான்.

    ஆறிய சிந்தையள் - (இலக்குவன் மீது கொண்ட காதலால்)
கொடுமை குறைந்த மனம் உடையவளாகிய (அயோமுகி); அஃது உரை
செய்ய -
அந்தச் சொற்களைச் சொல்ல; சீறிய கோளரி - சினம் கொண்ட
சிங்கம் போன்ற இலக்குவன்; கண்கள் சிவந்தான் - சினத்தால் கண்கள்
சிவந்து; 'இவ்வுரை வாயின் கூறிடின் - இப்படிப்பட்ட சொற்களை (நீ
மீண்டும்) வாயினால் கூறினால்; மாறு இலவார் கணை - (எனது) ஒப்பு
இல்லாத நீண்ட அம்புகள்; நின் உடல் கூறிடும் - உனது உடலைத் துண்டு
துண்டாக்கி விடும்'; என்றான் - என்று கூறினான்.

     நீ மீண்டும் இவ்வாறு கூறினால் என் அம்பு உன் உடலைக் கூறிடும்
என்றவாறு. கோளரி - உவமையாகு பெயர். கோளரி சிவந்தான் - திணை
வழுவமைதி. பாடலின் இறுதி வரியில் உள்ள சொல் நயம் காண்க.      54