3596.வெங் கதம் இல்லவள்
     பின்னரும், 'மேலோய்!       
இங்கு நறும் புனல்
     நாடுதி என்னின்,
அங்கையினால் எனை,
     "அஞ்சலை" என்றால்,
கங்கையின் நீர் கொணர்வென்
     கடிது' என்றாள்.

    வெங்கதம் இல்லவள் - கொடிய சினம் இல்லாதவளாகிய
(அயோமுகி); பின்னரும் - பின்பும்; 'மேலோய் - உயர்ந்தவனே!; இங்கு
நறும் புனல் நாடுதி என்னின் -
இவ்விடத்தில் நல்ல நீரைத் தேடுகிறாய்
என்றால்; எனை - எனக்கு; அங்கையினால் - உன்னுடைய அழகான
கைகளினால்; "அஞ்சலை" என்றால் - அஞ்சாதே என்று அபயம்
அளித்தால்; கடிது - விரைவாக; கங்கையின் நீர் கொணர் வென் -
(உனக்காகக்) கங்கையின் நீரைக் கூடக் கொண்டு வந்து கொடுப்பேன்;
என்றாள் - என்று கூறினாள்.

     அரக்கியாதலின் சினம் கொள்ளல் இயற்கையெனினும்,
இலக்குவன்பால் கொண்ட காமத்தால் கதம் (சினம்) காட்டாதவளாயினாள்.
கதம் - சினம், அங்கை - அங்கை என்க. கடிது - விரைவு. வெங்கதம்,
நறும்புனல் - பண்புத் தொகைகள், கொணர்வென் - தன்மை ஒருமை
வினைமுற்று.                                                 56