3597.சுமித்திரை சேய் அவள்
     சொன்ன சொல் அன்ன
கமித்திலன்; 'நின் இரு
     காதொடும் நாசி
துமிப்பதன் முன்பு அகல்
     என்பது சொல்ல,
இமைத்திலள், நின்றனள்,
     இன்ன நினைத்தாள்:

    சுமித்திரை சேய் - சுமித்திரை மகனாகிய இலக்குவன்; அவள்
சொன்ன அன்ன சொல் -
அந்த அயோமுகி கூறிய அத்தன்மையாகிய
சொற்களை; கமித்திலன் - பொறுக்காதவனாகி; 'நின் இரு காதொடும் நாசி
துமிப்பதன் முன்பு -
(அயோமுகியை நோக்கி நான்) உனது இரு
காதுகளோடு மூக்கையும் அறுப்பதற்கு முன்பு; அகல் - (இவ்விடத்தை
விட்டுப்) போய்விடு'; என்பது சொல்ல - என்று சொல்ல; இமைத்திலள்
நின்றனள் -
(அது கேட்டுக்) கண்ணிமைக்காமல் நின்றவளாகிய அவள்;
இன்ன நினைந்தாள் - இவ்வாறு நினைப்பவள் ஆனாள். நினைத்ததை
அடுத்த பாடலில் காண்க.

     அயோமுகியின் சொல் கேட்ட இலக்குவன் சினந்து, நான் உன் இரு
காதுகளையும் மூக்கையும் அறுப்பதற்கு முன்பு போய் விடு என்று கூற,
அயோமுகி திகைத்துக் கண்ணிமைக்காமல் நின்று சிலவற்றை எண்ணினள்
என்க. கமித்திலன் - பொறுத்திலன், துமித்தல் - துண்டித்தல், இமைத்திலள்
- முற்றெச்சம்.                                               57