3598. | 'எடுத்தனென் ஏகினென், என் முழைதன்னுள் அடைத்து, இவன் மெம்மை அகற்றிய பின்னை, உடற்படுமால்; உடனே உறும் நன்மை; திடத்து இதுவே நலன்' என்று, அயல் சென்றாள். |
எடுத்தனென் ஏகினென் - (இந்த இலக்குவனை) எடுத்துக் கொண்டு சென்று; என் முழை தன்னுள் அடைத்து - எனது குகையில் அடைத்து வைத்து; இவன் வெம்மை அகற்றிய பின்னை - இவனது சினத்தைத் தணித்த பின்பு; உடற்படுமால் - (இவன் என் எண்ணத்துக்கு) உடன்படுவான்; உடனே நன்மை உறும் - (அதற்குப் பின்பு) விரைவாக (இவனால்) எனக்கு நல்ல மகிழ்ச்சி கிடைக்கும்; இதுவே திடத்து நலன் - இவ்வாறு செய்வதுவே உறுதியாக நன்மை தரும்; என்று - என்று எண்ணி; அயல் சென்றாள் - (இலக்குவனது) அருகில் சென்றாள். இவனை என் குகைக்கு எடுத்துச் சென்று சினத்தைத் தணித்தால், இவன் எனக்கு உடன்படுவான். அதுவே உறுதியாகச் செய்யத் தக்கது என்று எண்ணிய அயோமுகி இலக்குவனுக்குப் பக்கத்தில் போனாள். முழை - குகை, வெம்மை - வெப்பம், ஈண்டுச் சினம். திடம் - உறுதி, எடுத்தனென் - முற்றெச்சம். ஆல் - அசை. 58 |