3601. | ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி, பூங் கழல் வார் சிலை மீளி பொலிந்தான்; வீங்கிய வெஞ்சின வீழ் மத வெம் போர் ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான். |
ஆங்கு - அந்த நிலையில்; அவள் மார்பொடு கையின் அடங்கி - அவளது மார்பின் கண்ணும் கையின் கண்ணும் அடங்கி; பூங்கழல் வார் சிலை மீளி - அழகிய வீரக்கழலை அணிந்த நீண்ட வில்லை ஏந்திய வீரனாகிய (இலக்குவன்); பொலிந்தான் - அழகு பெற விளங்கினான்; வீங்கிய வெஞ்சின - மிகக் கொடிய சினத்தினையும்; வீழ் மத - வடிகின்ற மதத்தினையும்; வெம்போர் - கொடிய போரினையும் செய்கிற; ஓங்கல் - யானையினது; உரிக்குள் - உரித்த தோலுக்குள் இருந்து காட்சியளிக்கும்; உருத்திரன் ஒத்தான் - சிவ பிரானை ஒத்து விளங்கினான். அயோமுகி தன் மார்போடு அணைத்துக் கைகளால் தழுவித்தூக்கிச் சென்ற இலக்குவன் உடம்பு முழுதும் மூடும் படி யானைத்தோலைப் போர்த்த சிவபிரான் போல் விளங்கினான். மீளி -ஆண்பால் சிறப்புப்பெயர். ஓங்கல் - மலை; ஈண்டு யானை;இருமடியாகு பெயர். 61 |