3602. | இப்படி ஏகினள், அன்னவள், இப்பால், 'அப்பு இடை தேடி நடந்த என் ஆவித் துப்புடை மால் வரை தோன்றலன்' என்னா, வெப்புடை மெய்யொடு வீரன் விரைந்தான். |
அன்னவள் - அத்தன்மையளாகிய அயோமுகி; இப்படி ஏகினள் - (மேற்குறிப்பிட்ட) இவ்வாறு (இலக்குவனைத் தழுவித் தூக்கி கொண்டு) சென்றாள்; இப்பால் - (இராமன் இருந்த) இவ்விடத்தில்; வெப்புடை மெய்யொடு வீரன் - (மனைவியையும் தம்பியையும் பிரிந்த) தாபம் கொண்ட உடலோடு கூடிய வீரனாகிய இராமன்; இடை அப்பு தேடி நடந்த - காட்டின் இடையில் தண்ணீரைத் தேடிக் கொண்டு நடந்து சென்ற; என் ஆவி - எனது உயிர் போன்ற; துப்புடை மால்வரை - வலிமை உடைய பெரிய மலை போன்றவனாகிய இலக்குவன்; தோன்றலன் என்னா - இன்னும் வரக்காணோமே என்று எண்ணி; விரைந்தான் - (அவனைத் தேடுவதற்காக) விரைந்து சென்றான். அப்பு - நீர். துப்பு - வலிமை. வெப்பு - விரக வேதனையும் நீர் வேட்கை வேதனையும் பாச வேதனையும் உண்டாக்கிய வெப்பம். அன்னவள் - குறிப்பு வினையாலணையும் பெயர். மால்வரை - உரிச்சொல் தொடர். வரை - உவமையாகு பெயர். 62 |