இலக்குவனைக் காணாத இராமன் துயரம்

கலிவிருத்தம்

3603.'வெய்து ஆகிய கானிடை
     மேவரும் நீர்
ஐது ஆதலினோ? அயல்
     ஒன்று உளதோ?
நொய்தாய் வர,
     வேகமும் நொய்திலனால்;
எய்தாது ஒழியான்;
     இது என்னைகொலாம்?

     நொய்தாய் வர - (இலக்குவன்) விரைவாய் வருவதற்கு;
வேகமும் நொய்திலனால் - விரைவும் குறைவாக உடையவனல்லன்;
எய்தாது ஒழியான் - வராமல் இருக்கவும் மாட்டான்; வெய்து
ஆகிய கானிடை மேவரும் நீர் ஐது ஆதலினோ? -
(அப்படி
இருந்தும் அவன் வாராமைக்குக் காரணம்) வெப்பம் உடைய காட்டில்
பொருந்தி உள்ள தண்ணீர் கிடைக்க அருமையானதா? (அல்லது);
அயல் ஒன்று உளதோ - வேறு ஏதாவது ஒன்று நேர்ந்து
விட்டதோ?; இது என்னை கொலாம் - இவ்வாறு ஆனதற்கு என்ன
காரணமோ?

     எண்ணிய கருமம் முடித்து வேகமாக வந்து சேரும் இயல்புள்ள
இலக்குவன் காட்டில் நீர் கிடைக்காமையாலோ, வேறு ஏதோ
ஏற்பட்டோ இன்னும் வந்து சேரவில்லை போலும் என இராமன்
எண்ணினான். வெய்து - வெப்பம். மேவுதல் பொருந்தல், ஐது -
அரிது. உண்மை எனினுமாம். ஈண்டு இன்மை குறித்தது. நொய்தாய் -
விரைவாய், ஆல், ஆம் - அசைகள், கொல் - ஐயப்பொருள்
தருவதோர் இடைச்சொல்.                                      63