3606.'வரி விற் கை என் ஆர்
     உயிர் வந்திலனால்;
"தரு சொல் கருதேன்; ஒரு
     தையலை யான்
பிரிவுற்றனென்" என்பது
     ஒர் பீழை பெருத்து
எரிவித்திட, ஆவி
     இழந்தனனோ?

    வரிவிற்கை என் ஆர் உயிர் வந்திலனால் - கட்டமைந்த
வில்லைக் கையில் ஏந்திய என் அருமையான உயிர் போன்ற தம்பி
வரவில்லை; தருசொல் கருதேன் - (தான் எனக்குச்) சொன்ன
சொற்களை எண்ணிக் கருதாமல்; யான் ஒரு தையலை - நான்
ஒப்பற்ற பெண்ணாகிய சீதையை; பிரிவுற்றனென் - பிரியப் பெற்றேன்;
என்பது ஒர் பீழை - என்ற ஒப்பற்ற பெருந்துன்பம்; பெருத்து
எரிவித்திட -
மிகுந்து தன்னை வாட்டி வருத்தியதால்; ஆவி
இழந்தனனோ -
உயிரை விட்டு விட்டானோ.

     மாயமான் பின் சென்ற போது தான் தடுத்ததைக் கேளாமல் பின்
சென்று சீதையைப் பிரிய வேண்டிய நிலைமை வந்ததை எண்ணிக்கலங்கி
உயிரை விட்டு விட்டானோ என இராமன் எண்ணினான்.தருசொல் -
இலக்குவன் இராமனுக்கு கூறிய சொல், "அடுத்தவும்எண்ணிச் செய்தல்,
அண்ணலே வன் கூறிய சொல். இதன் விரிவுஇங்குப் பேசப்படுகிறது. (3398).
பீழை - துன்பம். உயிர் -உவமையாகுபெயர்.                       66