3607. | 'உண்டாகிய கார் இருள் ஓடு ஒருவன் கண்தான்; அயல் வேறு ஒரு கண் இலெனால்; புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவென்; எண்தான் இலென்; எங்ஙனம் நாடுகெனா? |
உண்டாகிய கார் இருள் ஓடு - நிறைந்து உண்டாகிய கரிய இருளில்; ஒருவன் கண் தான் - என்னை விட்டுப் பிரிந்த ஒப்பற்றவனாகிய இலக்குவன், (எனக்குக்) கண்ணானவன்; அயல் வேறு ஒரு கண் இலெனால் - அவனைத் தவிர வேறு கண் ஒன்றும் எனக்கு இல்லை; புண் தான் உறு நெஞ்சு புழுங்குறுவென் - (முன்பு சீதையைப் பிரிந்ததால்) புண்மிகப்பட்ட நெஞ்சத்தில் (மீண்டும்) வருத்தம் அடைகிறேன்; எண் தான் இலென் - (எதுவும்) எண்ண முடியாது மனம் கலங்கி உள்ளேன்; எங்ஙனம் நாடு கெனோ - (அவனை எங்கு) எவ்வாறு தேடுவேனோ? 'இலக்குவனன்றிப் பிறிதொரு கண்ணிலாதவன் நான்; முன்பேபுண்பட்ட நெஞ்சில் மீண்டும் புண்பட்டவன். அவனது பிரிவால் மனம்மிகக் கலங்கி உள்ள நான் அவனை எவ்விடத்து எவ்வாறு தேடுவேன்'என இராமன் கூறினான். எனக்குக் கண்ணாக இருந்தவன் பிரிந்ததால்கண்ணிழந்த நான் தேடுவது எங்ஙனம் என்று குறித்த நயம் காண்க.தான், ஆல் - அசைகள். ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது. 67 |