3608.'தள்ளா வினையேன் தனி
     ஆர் உயிர் ஆய்-
உள்ளாய்! ஒரு
     நீயும் ஒளித்தனையோ?
பிள்ளாய்! பெரியாய்!
     பிழை செய்தனையால்;
கொள்ளாது உலகு உன்னை;
     இதோ கொடிதே!

     தள்ளா வினையேன் - நீக்க முடியாத வினையை
உடையவனாகிய எனது; தனி ஆர் உயிர் ஆய் உள்ளாய் -
ஒப்பில்லாத அருமையான உயிராக உள்ளவனாகிய; ஒரு நீயும் -
ஒப்பற்றவனாகிய நீயும்; ஒளித்தனையோ - (என்னை விட்டுப் பிரிந்து)
மறைந்து விட்டாயோ?; பிள்ளாய் - என் பிள்ளை போல்
இளையவனே; பெரியாய் - அறிவில் பெரியவனே; பிழைசெய்தனை-
(என்னைக் காரிருளில் கானகத்தே விட்டுச் சென்று) தவறு செய்து
விட்டாய்; இதோ கொடிதே - இச்செயல் மிகக்
கொடுமையானதேயாகும்; உன்னை உலகு கொள்ளாது - உனது
செயலை உலகத்தில் உள்ள பெரியவர்கள் ஏற்க மாட்டார்கள். ஆல் -
அசை.

     வினைப்படுபவனாகிய எனது ஒப்பற்ற தம்பியாகிய நீயும்என்னைப்
பிரிந்து விட்டாய். உனது இச்செயலைப் பெரியவர்கள் ஏற்கமாட்டார்கள்
என்று இராமன் நொந்து கூறினான். வினையேன் -குறிப்பு
வினையாலணையும் பெயர் நீயும் - எம்மை இறந்தது தழீ இயஎச்ச உம்மை;
முன்பே பிரிந்து விட்ட சீதையையும் நினைவுபடுத்துவதுஇவ்வும்மை. உலகு -
இடவாகுபெயர்.                                               68