3609.'பேரா இடர் வந்தன
     பேர்க்க வலாய்!
தீரா இடர் தந்தனை:
     தெவ்வர் தொழும்
வீரா! எனை
     இங்ஙன் வெறுத்தனையோ?
வாராய், புறம்
     இத்துணை வைகுதியோ?

    வந்தன பேரா இடர் - வந்தனவாகிய நீக்க முடியாத
துன்பங்களை; பேர்க்க வலாய் - நீக்க வல்லவனே!; தீரா இடர்
தந்தனை -
(என்னை விட்டுப் பிரிந்து எனக்கு) நீக்க முடியாத
துன்பத்தைத் தந்து விட்டாய்; தெவ்வர் தொழும் வீரா - பகை வரும்
தொழுகின்ற (வலி படைத்து) வீரனே!; எனை இங்ஙன்
வெறுத்தனையோ -
என்னை இவ்வாறு வெறுத்து விட்டாயோ?;
வாராய் - (இங்கு) வராமல்; புறம் - (என்னைத் தனியே விட்டு)
வெளியில்; இத்துணை வைகுதியோ - இவ்வளவு காலம் தங்கி
இருந்தாயோ?

     'எனக்கு ஏற்படும் பெருந் துன்பத்தைப் போக்க வல்லவனாகியநீ
காட்டில் என்னைத் தனியே விட்டுப் பிரிந்து சென்று எனக்குநீங்காத
துன்பத்தை உண்டாக்கிவிட்டாய்; இவ்வளவு நேரம் வராமல்தங்கியிருப்பது
உனக்குச் சரியோ' என்றவாறு. தெவ்வர் - பகைவர்.புறம் - வெளியில்.
பேரா, தீரா - ஈறுகெட்ட எதிர் மறைப்பெயரெச்சங்கள். வந்தன -
முற்றெச்சம்.                                                69