3610.'என்னைத் தரும்
     எந்தையை, என்னையரை,
பொன்னைப் பொருகின்ற
     பொலங் குழையாள்-
தன்னை, பிரிவேன்;
     உளென் ஆவதுதான்,
உன்னைப் பிரியாத
     உயிர்ப்பு அலவோ?

    என்னைத் தரும் எந்தையை - என்னைப் பெற்றெடுத்த
தந்தையாகிய (தசரதனையும்); என்னையரை - என் தாய்மார்களையும்;
பொன்னைப் பொருகின்ற பொலங் குழையாள் தன்னை -
திருமகளை ஒத்த பொன்னால் ஆகிய காதணி அணிந்த சீதையையும்;
பிரிவேன் - பிரிந்து; உளென் ஆவது தான் - (நான்) உயிருடன்
இருப்பது; உன்னைப் பிரியாத உயிர்ப்பு அலவோ - உன்னை
(மட்டும்) பிரியாத மூச்சுக் காற்றினால் அல்லவா?

     தந்தை தாயர், சீதை ஆகியோரை நான் பிரிந்த துன்பம் நீ
உடன் இருந்தமையால் நீங்கியது என்று இலக்குவனிடம் தான்
கொண்டிருந்த மிகுதியான அன்பை இராமன் வெளிப்படுத்திக்
கூறினான். உயிர் என்று (3606) ஆம் பாடலிலும் கண் என்று (3607)
ஆம் பாடலிலும், மீண்டும் தனி ஆர் உயிர் என்று (3608) ஆம்
பாடலிலும் குறிப்பிட்ட இராமன் இங்கு 'உயிர் மூச்சு' என்று
இலக்குவனைக் குறிப்பிட்டான்; இத்தொடர்ச்சியின் நயம் கண்டுணர்க.
பொன் - திருமகள். குழை - காதணி. எந்தை, என்னை - மரூஉ
மொழிகள். பொலங்குழை - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை. பிரிவேன் - இறந்த காலம் எதிர்காலமாக
வந்த கால வழுவமைதி.                                     70