3611.'பொன் தோடு இவர்கின்ற
     பொலங் குழையாள்-
தன்-தேடி வருந்து
     தவம் புரிவேன்,
நின்-தேடி
     வருந்த நிரப்பினையோ?
என்-தேடினை வந்த
     இளங் களிறே!

    என்தேடினை வந்த இளங்களிறே - (மாயமானின் பின்னால்
சென்ற) என்னைத் தேடினையாகிய வந்த இளைய ஆண் யானையைப்
போன்றவனே!; பொன் தோடு இவர்கின்ற பொலங் குழையாள் தன்-
பொன்னால் ஆகிய தோடு என்னும் காதணி அணிந்தவளாகிய
சீதையை; தேடி வருந்து - தேடி வருந்தித்; தவம் புரிவேன் -
(தனித்துத்) தவம் புரிபவனாகிய என்னை; நின் தேடி வருந்த
நிரப்பினையோ -
உன்னைத் தேடி வருந்தும் படி செய்துவிட்டாயோ?

     மாயமான் பின் சென்ற என்னைத் தேடி வந்த நீ, சீதையைத்
தேடித் தவம் புரிபவனாகிய என்னை, உன்னைத் தேடி வரும்படி
செய்து விட்டாயே என்றவாறு. தோடு - மகளிர் காதணி. நிரப்புதல் -
செய்தல். தன் - சாரியை. நின்தேடி - இரண்டாம் வேற்றுமைத்தொகை.
இளங்களிறு - அடையடுத்த உவமையாகு பெயர். ஓகாரம்வினா.        71