3612.'இன்றே இறவாது
     ஒழியேன்; எமரோ,
பொன்றாது ஒழியார்,
     புகல்வார் உளரால்;
ஒன்றாகிய உன்
     கிளையோரை எலாம்
கொன்றாய்; கொடியாய்!
     இதுவும் குணமோ?

    இன்றே இறவாது ஒழியேன் - இன்றைக்கே நான் இறக்காமல்
இருக்க மாட்டேன்; புகல்வார் உளரால் - (அதை அயோத்தியில்
உள்ளவர்களுக்குச்) சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்; (ஆதலால்);
எமரோ பொன்றாது ஒழியார் - (அதைக் கேட்ட) எம் உறவினர்கள்
இறக்காமல் இருக்க மாட்டார்கள்; ஒன்றாகிய உன் கிளையோரை
எலாம் கொன்றாய் -
(இவ்வாறு செய்ததால்) ஒற்றுமை உடைய உன்
உறவினர்கள் எல்லோரையும் நீ கொன்றவனானாய்; கொடியாய் -
(இத்தகைய) கொடுமை உடையவனே; இதுவும் குணமோ - இதுவும்
உனக்குத் தகுதியோ?

     'நீ வராவிட்டால் நான் இறப்பேன். அது தெரிந்தால் நம்
உறவினர் எல்லோரும் இறப்பர். இவ்வாறு அனைவரும் இறக்கத் தக்க
செயல் செய்த கொடியவனே இது உனக்குத் தகுதியோ' என்று
இராமன் கூறினான். எமர் - எம் உறவினர். பொன்றாது - அழியாது.
ஆல் - அசை கொன்றாய் - காலவழுவமைதி. எலாம் - இடைக்குறை
எமரோ - ஓகாரம் தெரிநிலை. குணமோ - ஓகாரம் எதிர்மறை.         72