3613. | 'மாந்தா முதல் மன்னவர்தம் வழியில், வேந்து ஆகை துறந்தபின், மெய் உறவோர் தாம்தாம் ஒழிய, தமியேனுடனே போந்தாய்; எனை விட்டனை போயினையோ?' |
மாந்தா முதல் மன்னவர் தம் வழியில் - மாந்தாதா முதலிய (நம் முன்னோர்களான) அரசர்கள் தம் கால்வழியில்; வேந்து ஆகை துறந்தபின் - அரசனாதலை (நான்) துறந்த பிறகு; மெய் உறவோர் தாம் தாம் ஒழிய - (என்) உண்மையான உறவினர்கள் யாவரும் உடன்வராமல் நீங்க; தமியேனுடனே போந்தாய் - தனித்தவனாகிய என்னுடன் வந்தாய்; எனை விட்டனை போயினையோ - (இப்போது நீயும்) என்னை விட்டுப் போய் விட்டாயோ? மெய் உறவோர் - உள்ளன்புடைய உறவினர். மாந்தா - மாந்தாதா. மாம்தாதா - மாந்தாதா என ஆயிற்று. 73 |