3615. நாடும், பல சூழல்கள்
     தோறும் நடந்து;
ஓடும், பெயர் சொல்லி
     உளைந்து; உயிர் போய்
வாடும்வகை
     சோரும்; மயங்குறுமால் -
ஆடும் களி மா மத
     யானை அனான்.

    ஆடும் களிமாமத யானை அனான் - பகைவரை அழிக்கும்
செருக்குடைய மிக்க மதத்தை உடையதுமாகிய யானையை
ஒத்தவனாகிய இராமன்; பல சூழல்கள் தோறும் நடந்து நாடும் -
பல இடங்களிலும் சென்று தம்பியைத் தேடுவான்; பெயர் சொல்லி
உளைந்து ஓடும் -
இலக்குவன் பெயரைச் சொல்லி வருந்தி விரைந்து
ஓடுவான்; உயிர்போய் வாடும் வகை சோரும் - உயிர் போய்
வாடும் வகையாகத் தளர்வான்; மயங்குறுமால் - மயக்கமடைவான்.

     இராமன் தம்பியைத் தேடி அலைந்தமை கூறுகிறார் ஆல் -அசை.
ஆடு - அடு என்பது முதல் நிலை நீண்ட தொழிற் பெயர்.மாமதம் -
உரிச்சொல் தொடர். மத யானை இரண்டாம் வேற்றுமைஉருபும் பயனும்
உடன் தொக்க தொகை. அனான் - குறிப்புவினையாலணையும் பெயர்.   75