3616. கமையாளொடும் என் உயிர்
     காவலில் நின்று
இமையாதவன், இத்
     துணை தாழ்வுறுமோ?
சுமையால் உலகூடு
     உழல்தொல் வினையேற்கு,
அமையாதுகொல் வாழ்வு?
     அறியேன்' எனுமால்.

    கமையாளொடும் - பொறுமை உடையவளாகிய சீதையுடன்;
என் உயிர் - எனது உயிரையும்; காவலில் நின்று - காக்கும்
தொழிலில் (ஊன்றி) நின்று; இமையாதவன் - கண்ணிமைக்காமல்
இருந்த இலக்குவன்; இத்துணை தாழ்வுறுமோ - (என்னை விட்டுப்
பிரிந்து) இத்துணை காலம் தாழ்த்துவானா?; சுமையால் உலகூடு
உழல் தொல் வினையேற்கு -
சுமையாக உலகத்தில் இருந்து
வருந்துகிற பழைய வினையை உடைய எனக்கு; வாழ்வு அமையாது
கொல் -
(உயிருடன் கூடி வாழும்) வாழ்க்கை அமையாது போலும்;
அறியேன்' எனுமால் - அறியேன் என்று (இராமன்) கூறினான்.

     'என்னையும் சீதையையும் கண் இமைக்காது காத்த இலக்குவன்
இவ்வளவு நேரம் வராமல் இருப்பானா? இருக்க மாட்டான். உலகத்தில்
பழியினை நுகர்ந்து வருந்தும் நான் உயிரோடு வாழ முடியாது
போலும்' என இராமன் எண்ணினான். சுமையாள் - பொறுமை
உடையவள் ஈண்டுச் சீதையைக் குறித்தது. சுந்தர காண்டத்தில்

     "கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உறக்கவ்வி (5078)

     என வருவதைக் காண்க. காவலில் நின்ற இமையாதவன் -
இதனைக் கங்கை காண் படலத்தில் குகன் பரதனிடம் கூறிய

    

     "அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
                                                  (2344)

     என்ற பாடலால் அறிக. இலக்குவனுக்கு 'உறங்கா வில்லி' என்ற
பெயர் உண்டு என்பதை நினைவு கொள்க.                       76