இறக்க எண்ணிய இராமன் அரக்கியின் அலறல் கேட்டல் 3617. | 'அறப் பால் உளதேல், அவன் முன்னவன் ஆய்ப் பிறப்பான் உறில், வந்து பிறக்க' எனா, மறப்பால் வடி வாள் கொடு, மன் உயிரைத் துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின் வாய், |
அறப்பால் உளதேல் - நல்வினைப் பகுதி உண்டானால்; அவன் முன்னவன் ஆய்ப்பிறப்பான் உறில் - (அந்த இலக்குவன் எனக்குத்) தமையன் ஆக வந்து பிறக்கக் கூடுமானால்; வந்து பிறக்க எனா - வந்து பிறக்கட்டும் என்று கூறிக் கொண்டு; மறப்பால் வடிவாள் கொடு - வீரம் பொருந்திய கூர்மையான வாளைக் கொண்டு; மன் உயிரை - தன் நிலை பெற்ற உயிரை; துறப்பான் உறுகின்ற - நீக்க முயல்கின்ற; தொடர்ச்சியின் வாய் - நேரத்தின் கண்ணே.... (அடுத்த பாடலில் முடியும்). நல்லூழ் அமையுமானால் அடுத்த பிறவியில் அவன் எனக்குத் தமையனாகப் பிறக்கிற பேறு வாய்க்கட்டும் என்று சொல்லி, இராமன் வாளால் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளப் போகும் நிலையினை இப்பாடல் சுட்டிற்று. அறப்பால் - அறத்தின் பயனாகிய நல்லூழ். அவன் எனக்குப் பாகவதனாயிருந்து செய்த கைங்கர்யங்களை நான் அவனுக்குச் செய்ய நல் வினைப் பயனால் அவன் எனக்கு அடுத்த பிறவியில் தமையன் ஆகப் பிறக்கட்டும் என்றவாறு. 77 |