3619. | 'பரல் தரு கானகத்து அரக்கர், பல் கழல் முரற்று அரு வெஞ் சமம் முயல்கின்றார், எதிர் உரற்றிய ஓசை அன்று; ஒருத்தி ஊறுபட்டு அரற்றிய குரல்; அவள் அரக்கியாம்' எனா, |
பரல் தரு கானகத்து - பருக்கைக் கற்கள் நிறைந்த (இந்தக்) காட்டில்; பல்கழல் முரற்று அரக்கர் - பல வீரக் கழல்கள் ஒலிக்கின்ற அரக்கர்கள்; அரு வெஞ்சமம் - கொடிய போரை; முயல்கின்றார் - செய்கின்றவர்களாகி; எதிர் உரற்றிய - மாறபட்டு எதிராக உரக்க ஒலித்த; ஓசை அன்று - பேரொலி அல்ல இது; ஒருத்தி ஊறுபட்டு அரற்றிய குரல் - ஒரு பெண் உடல் குறைபட்டு அரற்றிய குரலாகும் (இது); அவள் அரக்கியாம் எனா - அவள் அரக்கியாகவே இருக்க வேண்டும் என்று (எண்ணி)..... இந்த இரவில் எழுந்த அவலப் பேரொலி அரக்கர்கள் எழுப்பிய போரொலி அன்று, ஒரு பெண் உடல் குறைபட்டு அரற்றிய ஒலியே ஆகும் என்று இராமன் எண்ணினான். இந்த இரவு நேரத்தில் கானகத்திற்கு அரக்கியர் தவிரப் பிறர் வாராராகலின் "அவள் அரக்கியாம்" என இராமன் துணிந்தனன் என்க. முரற்றுதல் - ஒலித்தல். உரற்றுதல் - உரக்க ஒலித்தல். முயல்கின்றார், - முற்றெச்சம். 79 |