அழல் அம்புஒளியில் இராமன் தம்பியை அடைதல் 3620. | அங்கியின் நெடும் படை வாங்கி, ஆங்கு அது செங்கையில் கரியவன் திரிக்கும் எல்லையில், பொங்கு இருள் அப் புறத்து உலகம் புக்கது; கங்குலும், பகல் எனப் பொலிந்து காட்டிற்றே. |
கரியவன் - கரு நிறத்தை உடையவனாகிய இராமன்; (மேல் குறிப்பிட்ட படி எண்ணி); ஆங்கு - அப்பொழுது; அங்கியின் நெடும் படை வாங்கி - நெருப்பினது நீண்ட அம்பினை எடுத்து; அது - அந்த அம்பினைச்; செங்கையில் - தனது சிவந்த கையினால்; திரிக்கும் எல்லையில் - செலுத்தத் தொடங்கிய போது; பொங்கு இருள் - (உலகை மூடி இருந்த) செறிந்த இருட்டானது; அப்புறத்து உலகம் புக்கது - இப்புறத்தை விட்டு அப் புறத்து உலகத்தை அடைந்தது; கங்குலும் பகல் எனப் பொலிந்து காட்டிற்றே - (அங்கிருந்த) இரவும் பகல் போல அழகாக விளக்கம் உற்றுத் தோன்றியது. இராமன் அழல் அம்பினைத் தொடுத்துவிட (அக்கினி அம்பு) முயலுகையில் இருள் அப்புறம் ஓடியது. இரவும் பகல் போல் விளக்கமுற்றுத் தோன்றியது. அங்கி - தீ. திரித்தல் - செலுத்துதல். இப்பாடலில் இராமன் தீக் கடவுட் படை தொடுக்க முயலும் செய்தி கூறப்படுகிறது. அவ்வாறு அவன் அப்படை தொடுக்க முயல்வதற்குச் சில காரணங்கள் கூறப்படுகின்றன. 1) இருளைப் போக்கி வெளிச்சத்தை உண்டாக்கித் தம்பியைத் தேடிச் செல்ல அவ்வாறு எண்ணினான் என்றும். 2) இரவில் அரக்கருக்கு வலிமை மிகுதி அந்த இரவில் நடுக்காட்டில் தனியாய் அகப்பட்ட தம்பிக்கு யாது தீங்கு ஏற்படுமோ? என்று ஐயம் கொண்டு அவ்வம்பினைச் செலுத்த எடுத்தான் என்றும் கூறலாம். 80 |