3621. | நெடு வரை பொடிபட, நிவந்த மா மரம் ஒடிவுற, நிலமகள் உலைய, ஊங்கு எலாம், 'சட சட' எனும் ஒலி தழைப்பத் தாக்கவும், முடுகினன் இராமன், வெங் காலின் மும்மையான். |
இராமன் - இராமன்; நெடுவரை பொடிபட - பெரிய மலைகள் தூளாகவும்; நிவந்த மாமரம் ஒடிவுற - உயர்ந்த பெரிய மரங்கள் ஒடியவும்; நிலமகள் உலைய - நிலமகள் வருந்தவும்; ஊங்கு எலாம் - பக்கங்களில் எல்லாம்; 'சட சட' எனும் ஒலி தழைப்ப - சட சட என்ற ஓசை மிகவும்; வெங்காலின் மும்மையான் - கடுங்காற்றினும் மூன்று மடங்கு வேகத்தோடு; தாக்கவும் முடுகினன் - (அயோமுகியைத்) தாக்குவதற்காக விரைந்தான். இராமன் பெரு மலை பொடிபட, நெடு மரம் ஒடிய, நிலமகள் வருந்த, பக்கங்களில் எல்லாம் சட சட ஒலி எழக் காற்றினும் மூன்று மடங்கு வேகத்தோடு அயோமுகியைத் தாக்க விரைத்தான். சட சட - இரட்டைக் கிளவி, ஒலி குறித்து வந்தது. வெங்கால் - கடுங்காற்று. முடுகுதல் - விரைதல். 81 |