3622.ஒருங்கு உயர்ந்து, உலகின் மேல்,
     ஊழிப் பேர்ச்சியுள்
கருங் கடல் வருவதே அனைய
     காட்சித் தன்
பெருந் துணைத் தம்முனை
     நோக்கி, பின்னவன்,
வருந்தலை வருந்தலை
     வள்ளியோய்!' எனா,

    ஊழிப் பேச்சியுள் - ஊழிக் காலம் பெயரும் காலத்தில்;
(மகாப்பிரளய அழிவுக் காலத்தில்); உலகின் மேல் - உலகத்தின் மீது;
கருங்கடல் - கருமையான கடலானது; ஒருங்கு உயர்ந்து - ஒன்றாக
மேலே எழும்பி; வருவதே அனைய காட்சி - வருவதைப் போன்ற
காட்சித் தோற்றத்தை உடைய; தன் பெருந்துணைத் தம்முனை -
தன் பெருந்துணைவனான அண்ணனை; நோக்கி - பார்த்து;
பின்னவன் - பின் பிறந்தவனாகிய இலக்குவன்; வள்ளியோய் -
வண்மைக் குணம் உடையவனே; வருந்தலை வருந்தலை எனா -
வருந்தாதே வருந்தாதே என்று சொல்லி.. (அடுத்த பாடலில் முடியும்).

     காற்றின் மும்மடங்கு வேகத்தோடு உலக ஊழக் காலத்தில்
கருங்கடல் கிளர்ந்து வருவது போல் வந்த இராமனைக் கண்ட
இலக்குவன் 'வள்ளியோய் வருந்தலை வருந்தலை' என்றான் என்க.
உலக அழிவுக் காலத்தில் கடல் பொங்கி உலகை அழிக்கும் என்பது
நூல்களில் காணும் செய்தி. காட்சி - தோற்றம். தம் முன் - தமக்கு
முன் பிறந்தவன்; கருங்கடல், பெருந்துணை - பண்புத்தொகைகள்.
முன் - காலவாகுபெயர். வருந்தலை வருந்தலை - அடுக்குத் தொடர்;
வருந்தலை - முன்னிலை ஒருமை எதிர் மறை வினை முற்று.         82