3623.'வந்தனென் அடியனேன்; வருந்தல்,
     வாழி! நின்
அந்தம் இல் உள்ளம்' என்று,
     அறியக் கூறுவான்,
சந்த மென் தளிர் புரை
     சரணம் சார்ந்தனன்;
சிந்தின நயனம்
     வந்தனைய செய்கையான்.

    அடியனேன் வந்தனென் - அடியேன் வந்து விட்டேன்; நின்
அந்தம் இல் உள்ளம் வருந்தல் -
உனது அஞ்ஞான இருளாகிய
மயக்கம் அற்ற உள்ளம் வருந்தாதே; என்று அறியக் கூறுவான் -
என்று தெளிவாகக் கூறிக் கொண்டு (வந்து); சந்த மென் தளிர் புரை
சரணம் -
அழகிய மென்மையான தளிரை ஒத்த (இராமனது)
திருப்பாதங்களில்; சார்ந்தனன் - விழுந்து வணங்கினான்; சிந்தின
நயனம் வந்தனைய செய்கையான் -
(அது கண்ட இராமன்) இழந்த
கண்கள் மீண்டும் வந்தது போன்று (மகிழ்ச்சிச்) செய்கை
உடையவனானான்.

     இலக்குவன் தன்னைத் தேடி வந்த இராமனை நெருங்கி
அவனுடைய தாமரைத் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான்.
அவனைத் தன் கண் போல் எண்ணியிருந்த இராமன் (3607 ஆம்
பாடல் காண்க) இழந்த கண்ணைப் பெற்றவன் போல் மகிழ்ந்தான்.
இராமனின் கணையாழியைப் பெற்ற சீதையின் மகிழ்ச்சியைக் கூறவந்த
கவிஞர் சுந்தர காண்டத்தில்

     இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்,
    பழந்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்;
    குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்
    உழந்து விழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள் (5292)

என்ற பாடலை இதனோடு ஒப்பு நோக்கிக் காண்க. அந்தம் - அழிவு;
ஈண்டு அஞ்ஞான இருளாகிய மயக்கத்தால் ஏற்படும் அழிவைச் சுட்டி
வந்தது. சந்தம் - அழகு. "திருநாவுக்கரசெனும்பேர் சந்தமுற
வரைந்ததனை எம்மருங்கும் தாம் கண்டார்" எனத் திருத்தொண்டர்
புராணத்தில் (பெ. பு. 1793) உள்ள அப்பூதியடிகள் நாயனார்
புராணத்தில் வருவதைக் காண்க. புரை - ஒப்பு கரணம் - பாதம்.
சிந்தின - இழந்த. வாழி - அசை.                             83