3624. | ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன், ஈற்று இளங் கன்றினைப் பிரிவுற்று, ஏங்கி நின்று, ஆற்றலாது அரற்றுவது, அரிதின் எய்திட, பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான். |
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் -(இலக்குவனைப் பிரிந்ததால்) ஊற்றுப் போல மிகுதியாக கண்களில்இருந்து கண்ணீர் வெளிப்பட்டு பெருக நின்றவனாகிய இராமன்; ஈற்றுஇளங் கன்றினைப் பிரிவுற்று - ஈன்ற (தன்) இளமையான கன்றினைப்பிரிந்து; ஏங்கி நின்று - மிக வருந்தி நின்று; ஆற்றலாது அரற்றுவது- (அதை) ஆற்றிக் கொள்ள முடியாது ஒலி செய்யும் (நிலையில்);அரிதின் எய்திட - அந்தக் கன்று தானே வந்து சேர; பால் துறும்பனி முலை - (அக் கன்றைக் கண்ட மகிழ்ச்சியாலும் பாசத்தாலும்)பால் வெளிப்படும் சோர்கின்ற மடியை உடைய; ஆவின்பான்மையான் - பசுவினது தன்மை உடையவன் ஆயினான். கண்ணீர் ஊற்றுப் போல் பெருக நின்றவனாகிய இராமன் ஈன்றணிமை பொருந்திய தன் கன்றைக் காணாத புனிற்றா அவலித்து அழுங்கும் போது, கன்று தானே வர அக் கன்றினைக் கண்டு முலை வழியே பால் சோர நிற்கும் பசுப் போன்ற தன்மை உடையவன் ஆயினன் என்க. உலக வழக்கிலும் நூல் வழக்கிலும் கசிவுறும் அன்புக்குக் கன்றுடைய பசுவை உவமை கூறுவது மரபு. துறும் - வெளிப்படும்; பனிமுலை - பால் சோர்ந்தமையால் குளிர்த்திருக்கும் பால்மடி. 84 |