இராமன் இலக்குவனைத் தழுவி, நிகழ்ந்தது கேட்டல் 3625. | தழுவினன் பல் முறை; தாரைக் கண்ணின் நீர் கழுவினன், ஆண்டு அவன் கனக மேனியை; 'வழுவினையாம் என மனக் கொடு ஏங்கினேன்; எழு என, மலை என, இயைந்த தோளினாய்! |
ஆண்டு - (இராமன் இலக்குவனை) அப்பொழுது; அவன் கனக மேனியை - அந்த இலக்குவனது பொன்னிற உடம்பை; பல்முறை தழுவினன் - பலமுறை தழுவினான்; தாரைக் கண்ணின் நீர் கழுவினன் - தாரையாக வடிகிற (தன்) கண்ணீரால் கழுவினான்; 'எழு என மலை என இயைந்த தோளினாய் - கணைய மரம் போன்றும் மலை போன்றும் பொருந்திய தோள்களை உடையவனே; வழு வினையாம் என மனக் கொடு ஏங்கினேன் - (நீ இவ்வளவு நேரம் வந்து சேராததால்) தவறிப் போய் விட்டாயோ? என்று மனத்தில் கருதி வருந்தினேன். (என இராமன் கூறினான்). தாரை - ஒழுங்கு, கனகம் - பொன், எழு - கணைய மரம். கனக மேனி - உவமைத்தொகை, கொடு - இடைக்குறை. 85 |