3627. | 'ஆய்வுறு பெருங் கடல் அகத்துள் ஏயவன் பாய் திரை வருதொறும், பரிதற்பாலனோ? தீவினைப் பிறவி வெஞ் சிறையில் பட்ட யாம், நோய், உறு துயர் என நுடங்கல் நோன்மையோ? |
ஆய்வுறு பெருங் கடல் அகத்துள் ஏயவன் - (அளவில்லாதது என்று) ஆய்ந்து கூறுகிற பெரிய கடலின் நடுவில் கப்பலைச் செலுத்துபவன்; பாய்திரை வருதொறும் பரிதற் பாலனோ - பாய்கிற அலைகள் வரும் போதெல்லாம் வருந்துவதற்கு உரியவனோ? (அவ்வாறு வருந்துவதற்கு உரியவன் அல்லன் என்றபடி); தீவினைப் பிறவி வெஞ் சிறையில் பட்ட - தீவினையாகிய பிறவி என்கிற கொடிய சிறையில் அகப்பட்ட; யாம் - நாம்; நோய் உறுதுயர் என - வருத்தம் பொருந்திய துன்பம் என்று; நுடங்கல் - (மனம்) தளர்தல்; நோன்மையோ - பெருமையோ? (என்று இராமன் இலக்குவனிடம் கூறினான்). இன்னலும் உவகையும் அடைந்த இராமன், மனம் தேறி இவ்வாறு இலக்குவனுக்கு ஆறுதல் கூறினான் எனக் கொள்க. பிறவியாகிய பெருஞ்சிறைப்பட்ட நாம் வருந்தித் துன்புறுதலால் எந்தப் பயனும் இல்லை. எனவே, அரக்கி கையில் அகப்பட்ட துன்பத்துக்கு வருந்த வேண்டா என இராமன் கூறினான் என்க. வாழ்வியல் நெறி விளக்கமும் தத்துவ நயமும் செறிந்த பாடல் இது : ஏயவன் - அகப்பட்டவன் எனவும் பொருள் கூறலாம். பரிதல் - வருந்துதல், நோய் - வருத்தம். நுடங்கல் - தளர்தல். பாய் திரை - வினைத்தொகை. பிறவி வெஞ்சிறை உருவகம். 87 |