3629. | 'பிரிபவர் யாவரும் பிரிக; பேர் இடர் வருவன யாவையும் வருக; வார் கழல் செரு வலி வீர! நின்-தீரும் அல்லது, பருவரல், என்வயின் பயிலற்பாலதோ? |
வார் கழல் - நீண்ட வீரக் கழல் அணிந்த; செரு வலி வீர -போர் வலி படைத்த வீரனே; பிரிபவர் யாவரும் பிரிக - (என்னைத்தனியே விட்டுப்) பிரிகின்றவர்கள் எல்லோரும் பிரிந்து செல்க; பேர்இடர் வருவன யாவையும் வருக - பெருந்துன்பங்களாகவருகின்றவை எல்லாம் வருக; நின் தீரும் அல்லது - அவை எல்லாம் உன்னால் நீங்குமேஅல்லாது; என் வயின் - என்னிடம்; (இனிமேல்); பருவரல் -துன்பம்; பயிலற் பாலதோ - தங்கி வருத்தும் தன்மையதோ? அன்று. யார் என்னை விட்டுப் பிரிந்தாலும் எத்துன்பம் நேர்ந்தாலும்அவை உன்னால் தீர்ந்துவிடும். நீ என்னுடன் இருத்தலால் எவ்வகைத்துன்பமும் எனக்கு நேராது என்றபடி. திண்பொருள் எய்த லாகும்; தெவ்வரைச் செகுக்க லாகும்; நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணலாகும்; ஒண்பொரு ளாவது, ஐயா, உடன் பிறப்பு ஆக்கலாகா- எம்பியை ஈங்குப் பெற்றேன் என் எனக்கு அரியதுஎன்றான். (சீவக சிந்தாமணி. 1760) என்ற பாடலையும் ஒப்பிடலாம்.பருவரல் - துன்பம். பயிலல் - தொடர்ந்து தங்கி இருத்தல். பேர் இடர்- பண்புத் தொகை. வருவன - வினையாலணையும் பெயர். 89 |