3631.'துளைபடு மூக்கொடு செவி
     துமித்து உக,
வளை எயிறு இதழொடு
     அரிந்து, மாற்றிய
அளவையில், பூசலிட்டு
     அரற்றினாள்' என,
இளையவன் விளம்பிநின்று
     இரு கை கூப்பினான்.

    'துளைபடு மூக்கொடு - (அந்த அரக்கியினது) துவாரம்
பொருந்திய மூக்குடன்; செவி - காதுகளையும்; வளை எயிறு -
வளைந்த பற்களையும்; இதழோடு - இதழ்களையும்; துமித்து உக -
துண்டுபட்டு விழும்படி; அரிந்து - அறுத்து; மாற்றிய அளவையில் -
நீக்கிய போது; பூசலிட்டு அரற்றினாள்' என - (அவள்) பேரொலி
செய்து கதறினாள் என்று; விளம்பி நின்று - கூறி நின்று;
இளையவன் - இளையவனாகிய இலக்குவன்; இருகை கூப்பினான் -
(தன்) இரண்டு கைகளையும் கூப்பி நின்று (இராமனை) வணங்கினான்.

     அரக்கியின் மூக்கு முதலியவற்றை அரிந்ததனால் அவள்
அவலப் பேரொலி இட்டாள் என இலக்குவன் கூறி இராமனை
வணங்கினான். அவலப் பேரொலி கேட்டு இரக்கம் கொண்ட
இலக்குவன் உயிர் செகுக்காது விடுத்தனன் போலும். இப்பாடலில்
இலக்குவன் அயோமுகியின் மூக்கு, செவி, எயிறு, இதழ் ஆகியவற்றை
அறுத்து நீக்கிய செய்தி கூறப்படுவதால், இப்படலத்தில் உள்ள 86ஆம்
பாடலில் வரும்.

     என்னை இங்கு எய்தியது? இயம்புவாய் என
    அன்னவன் அஃது எலாம் அறியக் கூறலும். (3626)

    என்ற வரிகளுக்கு மூக்கு முதலியவற்றை நீக்கியதை ஒழித்துப்
பிற செய்திகளைப் பொருளாகக் கொள்க. அங்குத் தொகுத்துப்
பொதுவாகக் கூறியவர் இங்கு விரித்து விளக்குகிறார் என்க. துமித்து -
துண்டுபட்டு. அளவை - பொழுது, பூசல் - பேரொலி.                 91