இராமன் வருண மந்திரத்தால் வான நீர் பருகி, ஒரு மலையில்
தங்குதல்

3633.பேர அருந் துயர் அறப்
     பேர்ந்துளோர் என,
வீரனும் தம்பியும்
     விடிவு நோக்குவார்,
வாருணம் நினைந்தனர்; வான
     நீர் உண்டு,
தாரணி தாங்கிய
     கிரியில் தங்கினார்.

    வீரனும் - வீரனாகிய இராமனும்; தம்பியும் - தம்பியாகிய
இலக்குவனும்; பேர அருந்துயர் - நீக்க முடியாத பெருந்துன்பத்தை;
அறப் பேர்ந்துளோர் என - முழுதும் நீக்கியவர் என்னுமாறு
(அரக்கியால் ஏற்பட்ட துன்பத்தை நீக்கி); வாருணம் நினைந்தனர் -
வருண மந்திரத்தை எண்ணினர்; வான நீர் உண்டு - (அதனால்) வானத்தில்
இருந்து கிடைத்த நீரைப் பருகி; விடிவு நோக்குவார் - பொழுது விடியும்
காலத்தை எதிர் நோக்கியவர்களாய்; தாரணி தாங்கிய - நிலத்தைத்
தாங்கிக் கொண்டுள்ள; கிரியில் தங்கினார் - ஒரு பெரிய மலையில்
தங்கி இருந்தார்கள்.

     இராமனும் தம்பியும் நீக்க முடியாத துன்பத்திலிருந்து
விடுபட்டவர்களாகி, வருண மந்திரம் சொல்லி அதனால் கிடைத்த
வான நீரைப் பருகிப் பொழுது விடியும் காலத்தை எதிர்நோக்கி ஒரு
பெரிய மலையில் தங்கி இருந்தனர். பேரஅரும் - நீக்குதற்கு அரிய.
அற - முழுமையாக. வாருணம் - வருண மந்திரம். அருந்துயர் -
பண்புத்தொகை, பேர்ந்துளோர் - வினையாலணையும் பெயர்.
நோக்குவார் - முற்றெச்சம். வானநீர் - ஐந்தாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன் தொக்க தொகை.                                93