சீதையின் பிரிவால் இராமன் துயருறல்

3635. மயில் இயல் பிரிந்தபின்,
     மான நோயினால்,
அயில்விலன் ஒரு பொருள்;
     அவலம் எய்தலால்,
துயில்விலன் என்பது
     சொல்லற்பாலதோ?
உயிர், நெடிது
     உயிர்ப்பிடை, ஊசலாடுவான்.

    மயில் இயல் பிரிந்த பின் - (இராமன்) மயில் போன்ற சாயலை
உடைய சீதையைப் பிரிந்த பிறகு; மான நோயினால் -
அவமானமாகிய நோயினால்; ஒரு பொருள் அயில் விலன் - எந்த
ஒரு பொருளையும் உண்ணவில்லை; அவலம் எய்தலால் - துன்பம்
மிகுதி ஆனதால்; துயில் விலன் - உறக்கம் கொண்டானில்லை;
என்பது சொல்லற் பாலதோ - என்கிற செய்தியைச் சொல்ல
வேண்டுமோ?; நெடிது உயிர்ப்பிடை உயிர் ஊசல் ஆடுவான் -
பெருமூச்சின் இடையே உயிர் ஊசலாடப் பெறுவானாயினன்.

     சீதையைப் பிரிந்த அவமானமாகிய, நோய் காரணமாக இராமன்
உண்ணவுமில்லை, உறங்கவுமில்லை. பெருமூச்சினால் உயிர் போவது
வருவதாய் இருந்தது என்றவாறு. இயல் - சாயல், அயில்தல் -
உண்ணல், மயில் இயல் - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை. மானநோய் - உருவகம்.                   95