3637.கருங்குழல், சேயரிக்
     கண்ணி, கற்பினோர்க்கு
அருங் கலம், மருங்கு வந்து
     இருப்ப, ஆசையால்
ஒருங்குறத் தழுவுவென்;
     ஒன்றும் காண்கிலேன்;
மருங்குல்போல் ஆனதோ
     வடிவும், மெல்லவே?

    கருங்குழல் - கருமையான கூந்தலினையும்; சேயரிக் கண்ணி -
செவ்வரி படர்ந்த கண்களையும் உடைய; கற்பினோர்க்கு அருங்கலம்-
கற்பினை உடைய மகளிருக்கு அருமையான அணிகலன் போன்ற
(சீதை) ; மருங்கு வந்து இருப்ப - (என்) பக்கத்தில் வந்து இருக்க;
ஆசையால் ஒருங்குறத் தழுவுவென் - (அவள் மீது கொண்ட)
காதலால் உடல் சேரத் தழுவுவேன்; ஒன்றும் காண்கிலேன் -
(ஆனால் அவ்வாறு தழுவியும்) ஒன்றையும் காணவில்லை; வடிவும் -
அச்சீதை உடைய உருவமும்; மருங்குல் போல் மெல்லவே
ஆனதோ -
(அவளது பொய்யோ எனும்) இடையினைப் போல்;
மெதுவாக - இல்லையாய்விட்டதா?

     சீதையின் உருவெளித் தோற்றத்தை உண்மையென நம்பித்
தழுவிய இராமன், அவளது இடை போல் உருவமும் இல்லாமல் போய்
விட்டதோ என்கிறான். குழல் - கூந்தல். அரி - வரி. மருங்கு -
பக்கம். மருங்குல் - இடை. மூவழிப் பெருகி மூவழிச் சிறுகிய
உறுப்புகள் கொண்டவள் என்பதைக் கூறியவாறு. கருங்குழல் -
பண்புத் தொகை. கற்பினோர் - வினையாலணையும் பெயர்.
அருங்கலம் - பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.  97