3638.'புண்டரிகப் புது
     மலரில் தேன் பொதி
தொண்டைஅம் சேயொளித்
     துவர்த்த வாய் அமுது
உண்டனென்; ஈண்டு அவள்
     உழையள் அல்லளால்;
கண் துயில் இன்றியும்
     கனவு உண்டாகுமோ?

    புதுப் புண்டரிக மலரில் - சீதையினது முகம் ஆகிய புதிய
தாமரை மலரில்; தேன் பொதி - தேன் நிறைந்த; தொண்டை அம்
சேயொளி -
கொவ்வைப் பழம் போன்றதும் அழகிய சிவந்த
நிறத்தையும் உடைய; துவர்த்த வாய் அமுது உண்டனென் - பவள
வாயினது அமுதத்தை உண்டேன்; ஈண்டு - (ஆனால்) இங்கு; அவள்
உழையள் இன்றியும் கனவு உண்டாகுமோ -
கண்ணுறங்காமல்
இருக்கும் போது கூடக் கனவு தோன்றுமோ?

     சீதையின் தாமரை முகத்தில் உள்ள கொவ்வைச் செவ்வாய்
அமுது உண்டது போல் எனக்குத் தோன்றியது. ஆனால் உண்மையில்
அவள் என் பக்கத்தில் இல்லை. இது தூக்கமில்லாமல் ஏற்பட்ட கனவு
என்று சொல்லத் தக்கதோ?' என்று இராமன் வருந்திக் கூறினான்.
புண்டரிகம் - தாமரை. தொண்டை கொவ்வைப் பழம். துவர்த்த -
பவளத்தின் தன்மை வாய்ந்த; உழை - பக்கம். புண்டரிகப் புதுமலர் -
உவமையாகுபெயர். சேயொளி - பண்புத் தொகை. துவர்த்த -
பெயரெச்சம். ஆல் - ஈற்றசை.                                 98