3639.'மண்ணினும், வானினும்,
     'மற்றை மூன்றினும்,
எண்ணினும், பெரியது ஓர்
     இடர் வந்து எய்தினால்,
தண் நறுங் கருங் குழல்
     சனகன் மா மகள்
கண்ணினும், நெடியதோ,
     கொடிய கங்குலே?

    மண்ணினும் - நிலத்தினும்; வானினும் - வானத்தினும்; மற்றை
மூன்றினும் -
ஐம்பூதங்களில் மூன்றான நீர், தீ, வளி என்பவற்றினும்;
எண்ணினும் - எண்ணத்தைக் காட்டிலும்; பெரியது - பெரியதாகிய;
ஓர் இடர் வந்து எய்தினால் - ஒரு துன்பம் வந்து அடைந்ததால்;
தண் நறுங்கருங்குழல் - குளிர்ந்த நறுமணம் மிக்க கரிய கூந்தலை
உடைய; சனகன் மாமகள் - சனகனது சிறப்புக்குரிய மகளான
(சீதையினது); கொடிய கங்குல் - (இந்தக்) கொடிய இரவு;
கண்ணினும் நெடியதோ - கண்களைக் காட்டிலும் நீண்டதோ?

     ஐம்பூதங்களிலும் ஆற்றல்மிக்க பேரிடர் வந்து அடைந்தால்,
சனகன் மாமகள் கண்ணினும் நீண்டதாகியது இக் கொடிய இரவு
என்கிறான் இராமன். காதொடும் குழை பொரு கயற்கண்நங்கை 1, 10,
45 என்று சீதையின் கண்களைக் கூறியுள்ளதை நினைக்க.
பிரிவினாலும் சீதையின் உருவெளித் தோற்றம் கண்டமையாலும்
இவ்வாறு கூறினான் என்க. மற்றை மூன்று, நீர், தீ, வளி என்பன.
மாமகள் - உரிச்சொல் தொடர். 'எய்தினால்' என்பது பொருள்
தொடர்பு நோக்கி 'எய்தியதனால்' எனப் பொருள் கொள்ளப்பட்டது.
ஐம்பூதங்களினும் பெரிதாகிய (பிரிவுத்) துன்பம் வந்தால், கொடிய
கங்குல் சீதை கண்ணினும் நெடியதாக இராமனுக்குத் தோன்றுகிறது.       99