3641. இன்னன இன்னன பன்னி,
     ஈடு அழி
மன்னவர் மன்னவன்
     மதி மயங்கினான்;
அன்னது கண்டனன்,
     அல்கினான் என,
துன்னிய செங் கதிர்ச்
     செல்வன் தோன்றினான்.

    இன்னன இன்னன பன்னி - இவ்வாறாகப் பல சொற்களைப்
பல முறை கூறி; ஈடு அழி மன்னவர் மன்னவன் - வலிமை
ஒடுங்கிய பேரரசனாகிய இராமன்; மதிமயங்கினான் - அறிவு
கலங்கினான்; துன்னிய செங்கதிர்ச் செல்வன் - (அவனது பிரிவுத்
துயர் கண்ட) சிவந்த கதிர்களை உடைய கதிரவன்; அன்னது
கண்டனன் -
(அவனது) அத் தன்மையைக் கண்டனனாகி;
அல்கினான் என - (இவன்) மிக மெலிந்தான் என்று எண்ணி;
தோன்றினான் - (அவலத் துயர் துடைக்கத் தோன்றியவன் போலத்)
தோன்றினான்.

     இராமன் பலவாறு வருந்தித் துன்பம் கொண்டதை நீக்க
உதித்தவன் போல் கதிரவன் உதித்தான். ஏதுத் தற்குறிப்பேற்ற அணி.
இப்படலத்தில் விப்ரலம்பசிருங்காரச் சுவை மிகுந்துள்ளது. இராமன்
இலக்குவனிடம் கொண்ட உளமொன்றிய அன்பையும், சீதையிடம்
கொண்ட உயிர் ஒன்றாகிய செயிர் தீர் காதலையும், இப்படலவழி
உணர்ந்து மகிழலாம். இருள் நீங்கி ஒளி பரவிய நிலையில் இப்படல
அமைப்பு அமைந்துள்ள நுட்பத்தை எண்ணி உணர்க. பன்னுதல் -
பலமுறை கூறல் ஈடு - வலிமை. இதனை,

     ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை
    வாசிப்பாடு அழியாத மனத்தினான் (5170)

    என்ற காட்சிப் படலப் பாடலிலும் காணலாம். அல்குதல் -
சுருங்குதல், மெலிதல்.                                       101