3642.'நிலம் பொறை இலது' என,
     நிமிர்ந்த கற்பினாள்,
நலம் பொறை கூர்தரும்
     மயிலை நாடிய,
அலம்புறு பறவையும்
     அழுவவாம் எனப்
புலம்புறு விடியலில்,
     கடிது போயினார்.

    நிலம் பொறை இலது என - இந்த நிலவுலகம் பொறுமை
உள்ளதன்று என்று கூறும்படி; நிமிர்ந்த கற்பினாள் - உயர்ந்த
கற்பினை உடையவளாகிய; பொறை நலம் கூர்தரும் - பொறுமைப்
பண்பு மிக்குடைய; மயிலை - மயில் போன்ற சாயலை உடைய
சீதையை; நாடிய - தேடி; அலம்புறு பறவையும் - அலைதலைக்
கொண்ட பறவைகளும்; அழுவவாம் என - அழுகின்றன என்று
கூறும்படியாக; புலம்புறு விடியலில் - (அப்பறவைகள்) ஒலிக்கிற
விடியல் காலத்தில்; கடிது போயினார் - விரைவாகச் (சீதையைத்)
தேடிப் போனார்கள்.

     விடியலில் பறவைகள் ஒலி எழுப்புவது சீதையைத் தேடி
அவளைக் காணாமல் அவை அழுவன போன்ற என்றார். தன்மைத்
தற்குறிப்பேற்ற அணி. அகழ்வாரைத் தாங்கும் நிலத்தினும் பொறுமை
உடையள் அந்நிலத்துத் தோன்றிய சீதை என்றபடி. அலம்புறு பறவை
- அலைதலைக் கொண்ட பறவை. மயில் - உவமையாகு பெயர்.

     இப்படலத்தில் சீதையைத் தேடல், இலக்குவனைத் தேடல் என்ற
இருவகைத் தேடல்களும், சீதையைப் பிரிந்த அவலம், இலக்குவனைப்
பிரிந்த அவலம் என்ற இருவகை அவலங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த இரட்டை நிலையை உணர்ந்து தெளிக.                     102