அறுசீர் ஆசிரிய விருத்தம் கவந்தன் வனத்தைக் காணுதல் 3643. | ஐ-ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி, அடவி புடையுடுத்த வையம் திரிந்தார்; கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான்; எய்யும் சிலைக் கை இருவரும் சென்று, இருந்தே நீட்டி எவ் உயிரும் கையின் வளைத்து வயிற்றின் அடக்கும் கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார். | ஐ-ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி - இருபத்தைந்து என்ற எண்ணிக்கை எட்டிய யோசனை தூரத்தின் இரு மடங்கு (அதாவது ஐம்பது; அடவி படை உடுத்த வையம் திரிந்தார் - காடுகளால் பக்கங்களில் சூழப்பட்ட நிலப் பகுதியில் இராம இலக்குவர்கள் அலைந்தார்கள்; கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான் - சூரியன் (வானின்) நடுப் பகுதியை வந்து சேர்ந்தது; எய்யும் சிலைக் கை இருவரும் சென்று - எய்யும் கணை பொருந்திய வில்லை ஏந்திய கைகளை உடைய இராமலக்குவர் இருவரும் (மேலே சென்று); இருந்தே நீட்டி - தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு கைகளை மட்டும் நீட்டி; எவ் உயிரும் கையின் வளைத்து - தன் எல்லைக்குள் சிக்கும் எல்லா உயிரினங்களையும் வளைத்துப் பிடித்து; வயிற்றின் அடக்கும் - தன் வயிற்றுக்குள்ளே செறித்துச் செரித்துவிடுகின்ற; கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார் - கவந்தன் வாழும் கானகத்தைக் கண்டார்கள். ஐம்பது யோசனை தூரத்தைக் கடந்த இராமலக்குவர்கள் ஒரு நாள் நண்பகற் பொழுதில் கவந்தன் வாழும் கானகத்தைக் கண்டார்கள் என்பது செய்யுளின் திரண்ட கருத்து. 'இருவரும்.... திரிந்தார்.... கண்ணுற்றார்' எனக் கூட்டுக. இருவரும் என்ற எழுவாய் இடையே அமைந்து இருபாலும் உள்ள வினைமுற்றுக்களைக் கொண்டு முடிந்தது. கபந்தம் (அல்லது கவந்தம்) என்ற வட சொல்லுக்கு முதலில் வாயகன்ற மிடா (பீப்பாய்) என்பது பொருள். மிடாவுக்கு வாய் உண்டு; உள்ளிடம் உண்டு. இதே கருத்துக்குரிய வடிவம் பெற்றவன் - வாயும் வயிறுமாக, வயிற்றிலே வாயனாக இருப்பவன். இந்திரனின் வச்சிராயுதம் தாக்கியதால் தலை வயிற்றுள் போய் வயிற்றில் வாயனாக உருமாறிய அரக்கனுக்கு கவந்தன் என்பது பெயராயிற்று. இராமலக்குவரின் வாளால் பிளக்கப்படும் வரை இவ்வடிவினனாயிருக்குமாறு சபிக்கப்பட்டவன், இவன். கவந்தன் செய்தி : தனு என்னும் பெயருடைய கந்தருவன் தூலசிரசு என்ற முனிவரின் வடிவத்தை எள்ளினான். சினமுற்ற முனிவரின் சாபத்தால் கவந்தன் ஆயினான். இந்திரனின் வச்சிராயுதம் தாக்கியதால் தலை வயிற்றுள் ஆழ்ந்தது. இவன் கரங்கள். ஒரு யோசனை நீளம் கொண்டனவாம். தன் கரங்களுக்கு உட்பட்ட எதனையும் கவர்ந்து, வயிற்றுள் திணித்து உணவாகக் கொள்வது இவன் வாழ்வு. ஐ ஐந்து அடுத்த இரட்டி : இருபத்தைந்தின் இருமடங்கு; ஐம்பது. நான்கு குரோசம் கொண்டது ஒரு யோசனை. இரண்டரை மைல் ஒரு குரோசம். எனவே, யோசனை என்பது பத்து மைல் தொலைவு ஆகிறது. காதம் என்பதும் சுமார் பத்து மைல் தொலைவு என்பர். யோசனையைக் கூப்பிடு தூரம் என்றும் கூறுவர். 1 |