கவந்தன் கரவலையில் இருவரும் 3647. | நால் திசைப் பரவையும், இறுதி நாள் உற, காற்று இசைத்து எழ எழுந்து, உலகம் எங்கணும் ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன போல், திசை சுற்றிய கரத்துப் புக்குளார். |
இறுதி நாள் உற - உலகங்கள் அழியும் ஊழிக்காலம் வந்து சேர்தலால்; நால் திசைப் பரவையும் - நான்கு திசைகளிலும் உள்ள எல்லாக் கடல்களும்; உலகம் எங்கணும் - உலகம் முழுவதிலும்; காற்று இசைத்து எழ எழுந்து - ஊழிக் காற்று முழங்கிப் பரவி; ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றனபோல் - எதிர்த்து ஆரவாரத்தோடு உயரமாகி வந்து நெருக்குவனபோல; திசை சுற்றிய - எல்லாத் திசைகளிலும் சுழன்று வருகின்ற; கரத்துப் புக்குளார் - (கவந்தனின்) கைகளிடையே இராமலக்குவர் புகுந்தனர். ஊழிக் காற்றினால் பொங்கிய எல்லாக் கடல்களும் பரவிச்சுழல்வது போல வேகமாகக் கவந்தனின் கரங்கள் சுழன்று வளைத்தன;வளைத்த கரங்களிடையே இருவரும் சிக்கினர். இது பாடலின் கருத்து.நால்திசைப் பரவையும் - இதன்கண் உள்ள உம்மை நான்குதிசைகளிலும் உள்ள கடல்கள் யாவற்றையும் உளப்படுத்தலின்முற்றும்மையாகும். 5 |