3648. | தேமொழி திறத்தினால், அரக்கர் சேனை வந்து ஏமுற வளைந்தது என்று, உவகை எய்தினார்; நேமி மால் வரை வர நெருக்குகின்றதே ஆம் எனல் ஆய, கைம் மதிட்குள் ஆயினார். |
நேமி மால் வரை வர - சக்கரவாளமாகிய பெரிய மலை நெருங்கி வந்து; நெருக்குகின்றதே ஆம் எனல் ஆய - நெருக்குகின்ற தாம் என்று சொல்லத்தக்க வகையில் அமைந்த; கைம் மதிட்குள் ஆயினார் - (கவந்தனின்) கைகளாகிய மதிலுக்குள் சிக்கினவர்களாய்; தேமொழி திறத்தினால் - இனிய மொழி பேசுவோளாகிய சீதை பொருட்டாக; அரக்கர் சேனை வந்து - (இராவணனால் ஏவப்பட்ட) அரக்கர்களின் படைகள் வந்து; ஏமுற வளைந்தது என்று - காவல் பொருந்தச் சூழ்ந்தது என்று கருதி; உவகை எய்தினார் - மகிழ்ச்சி அடைந்தனர். சீதையைத் தேடி வருகின்ற இராமலக்குவரை எதிர்த்து ஒழிப்பதற்காக அரக்கர்களின் சேனை வந்துவிட்டதாக இராமலக்குவர் கருதினர். எதிரியைத் தாம் சென்று அடையுமுன் அவனே தன் படைகளை அனுப்பியிருப்பதாக நினைத்து வீரர் இருவரும் மகிழ்ந்தனர். 'போர் எனில் புகலும் புனைகழல் மறவர்' (புறநா. 3) ஆதலின், போர் எதிர்வந்தது கண்டு அதனால் வரும் மோதலை நினைந்து மகிழ்ந்தனர். போரை விரும்புதல் (புகலுதல்) வீரர் இயல். தேமொழி - அன்மொழித் தொகை ஏமம் + உற = ஏமுற என நின்றது. கைம் மதில் - உருவகம். அண்டங்களின் எல்லையில் வட்ட வடிவ மதிலாகச் சக்கரவாளம் என்ற மலை இருப்பதாக புராணங்கள் கூறும். உலகங்களுக்கு ஒளி வழங்கும் ஒளிவட்டத்துக்கும் அதற்கப்பால் உள்ள இருட்பரப்புக்கும் எல்லையாக இருப்பது இச் சக்கரவாளமே என விளக்குகிறது மோனியர் வில்லியம்ஸ் தந்த அகராதி. 6 |